ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மும்பை பிரபாதேவியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, ''தற்போது காஷ்மீரை இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். அடுத்து மகாராஷ்டிராவையும் பிரிக்க திட்டமிடுவார்கள். மகாராஷ்டிரா மாநிலம் பிரிக்கப்பட்டால், உங்கள் வீட்டுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய ராணுவம் நிற்கும். இணையதளம், மொபைல் போன் சேவையைத் துண்டித்து விடுவார்கள்.
மத்திய அரசின் அடுத்த இலக்கு மகாராஷ்டிரா மாநிலமாகத்தான் இருக்கும். நீங்கள் பா.ஜ.க.வை புகழ்ந்து பேசினாலும் அவர்கள் உங்களை விட்டுவைக்கமாட்டார்கள். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மக்களின் திசை திருப்பும் முயற்சியாகும். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டன மூலம் காஷ்மீரில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என பிரதமர் கூறுகிறார். அப்படி என்றால், சிறப்பு அந்தஸ்து இல்லாத மற்ற மாநிலங்களில் ஏன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை'' இவ்வாறு கூறினார்.