ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ நீக்கப்படும் என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அறிவித்தார். இதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் ஒருபகுதியாக சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு-370-ன் மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மோடியின் மத்திய பா.ஜ.க அரசு ரத்து செய்துள்ளது. இத்துடன் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒன்றியப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மக்களின் நன்மதிப்பை பெற்ற அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அமர்நாத் யாத்திரையை பாதியில் முடித்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, அவைகள் ராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளன. ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் சில பத்தாண்டுகளாகவே பதட்டம் நீடித்து வருகிறது. பயங்கரவாதிகள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை எதிர் கொண்டு வருகிறது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இராணுவம் அத்துமீறிச் செயல்படுவதால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், ஜனநாயக நடைமுறைகளை முடக்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நாட்டின் ஒற்றுமை கருதி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ன் மூலம் ஆங்கில ஆட்சியின் பிளவுச் சதி முறியடிக்கப்பட்டு, இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் பதட்டம் நிலவிவரும் சூழ்நிலையில், அரசியல் தீர்வுக்காண வழிமுறைகள் உருவாக்கப்படாமல், அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை பிரித்திருப்பது நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
மத்திய அரசின் ஜனநாயக விரோத, மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களை மதச்சார்பற்ற, ஜனநாயக, தேசபக்த சக்திகள் ஒருங்கிணைந்து தடுத்து நிறுத்த தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.