விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் நீண்டகால செயல் திட்டத்தை இன்றைக்கு வெளிப்படையாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். இதுதான் அவர்களின் நீண்ட கால கனவு திட்டம். மக்களவையில் அவர்களுக்கு உள்ள அறுதிப் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி இந்த கூட்டத்தொடரில் ஏராளமான மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றினார்கள்.
அடுத்து என்ன செய்யப் போகிறார்களோ என்ன அறிவிப்பை செய்யப் போகிறார்களோ என்ற அச்சத்தோடு காத்திருந்த நிலையில் திடீரென அவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினரை குவித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். மேலும் முன்னாள் முதலமைச்சர்கள் 3 பேரை வீட்டுக்காவலில் சிறை வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இவ்வளவு காலம் வழங்கப்பட்டு வந்த சிறப்பு தகுதி நிலையை நீக்கி மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இந்தியாவின் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் இதுவரையில் நீடித்து வந்தது. அரசியலமைப்புச் சட்டம் 370ஆவது உறுப்பு மற்றும் 35ஏ ஆகிய உறுப்புகளும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனி அந்தஸ்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் அந்த மாநிலத்தவரை தவிர வேறு யாரும் அங்கே நிலம் விலைக்கு வாங்க முடியாத நிலையில் இருந்தது.
இவற்றையெல்லாம் தகர்த்து காஷ்மீரை இரண்டாகப் பிரித்து யூனியன் தேசங்களாக அறிவித்திருக்கிறார். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒருபயங்கரவாத நடவடிக்கை. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது, இதனால் எத்தகைய எதிர் விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் இப்போது நம்மை ஆக்கிரமித்து உள்ளது, விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த பிரச்சினையில் காங்கிரஸ், தி.மு.க மற்றும் இடதுசாரிகளோடு இணைந்து நிற்போம். நாளை மக்களவையில் இதை அறிமுகப்படுத்தும்போது கடுமையாக எதிர்ப்போம்.
இந்திய மக்கள் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதை உணர்த்த வேண்டிய தருனமா இருக்கிறது, ஆகவே ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான இந்த நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது'' இவ்வாறு தெரிவித்தார்.