தமிழகத்தில் இயங்கி வரும் அம்மா உணவகம் போன்று ஆந்திராவில் "அண்ணா கேண்டீன்கள்" இயங்கிவந்தது. இந்த கேண்டீன்களுக்கு அக்ஷய பாத்திரா எனும் நிறுவனம் மூலம் உணவு தயாரித்து வழங்கிவந்தது. அந்த நிறுவனமும் தற்போது உணவு சப்ளை செய்வதை நிறுத்திக்கொண்டது. இதனால் அப்பகுதி ஏழை மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினார்கள்.
ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்.டி. ராமா ராவை அனைவரும் ‘அண்ணா’ என்று தான் அழைப்பார்கள். அவரின் நினைவாக அவர் பெயரை வைத்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அரசால் "அண்ணா கேண்டீன்கள்" தொடங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட கேண்டீன் செயல்பட்டு வந்தது.
தினக் கூலித் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு இந்த கேண்டீனில் இருந்து காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு சிற்றுண்டி ஆகியவை மலிவான விலையில் வழங்கப்பட்டு வந்தது.
இந்த கேண்டீன் நேற்றைய தினம் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி புதிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு மூடியுள்ளது. இந்த கேண்டீனுக்கு வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் மாநில அரசு நிறுத்தக் கூறியதால், கேண்டீன் மூடப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
முன்னதாக இந்த கேண்டீன் அமைக்கப்படுவதில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டது என்றும். இதன்காரணமாக இந்த திட்டத்தை மறு சீரமைக்க ஜெகன்மோகன் ரெட்டி அரசு முடிவு எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நரா லோகேஷ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “முதல்வர் அவர்களே பசிக்கு அரசியல் தெரியாது, உங்கள் பழிவாங்கும் நோக்கத்திற்கு ஏழைகள் பசியுடன் தான் உறங்கவேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.