வேலூர் மக்களவை தொகுதிக்கு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பலரும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேலூர் மக்களுக்கு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன், வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் நடைபெற்று முடிந்திருக்க வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பேராதரவுடன் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில், அதைத் தடுத்து நிறுத்தி தி.மு.க.விற்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 5-ம் நாள் தேர்தல் நடைபெறுகிறது.
வகுப்புவாத சக்தியான பா.ஜ.க. மிருக பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் மத்திய ஆட்சி அமைத்துள்ளது. மக்களவையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதால், தனக்குள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி, நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் தகர்த்து தனது சொந்த விருப்பப்படி, மக்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தை தொடந்து செயல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி புரியும் கட்சியான அ.இ.அ.தி.மு.க மத்திய பா.ஜ.க. ஆட்சியின் நிழல் அரசாக செயல்படுகிறது. மத்திய ஆட்சி நிறைவேற்றி வருகின்ற மக்கள் விரோத, தொழிலாளர் விரோத சட்டங்கள் அனைத்திற்கும் ஆதரவாக செயல்பட்டு வருகின்றது. மாநில உரிமைகள், நலன்கள் காக்க தமிழ்நாடு அரசு தவறி விட்டது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை அன்றாட நிகழ்ச்சிகளாகி விட்டன. சமுக விரோதிகள், கூலிப்படையினர் கை மேலோங்கி சட்டம், ஒழுங்கு நிலைகுலைந்து மக்கள் பாதுகாப்பு அற்று, ஒவ்வொருவரும் அச்சத்துடன் வாழவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் சென்னை உட்பட 5 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், வேளாண்மை தொழிலுக்கும், பயன்பட்டு வரும் பாலாற்றின் குறுக்கே 22 இடங்களில் 40 அடி உயரத்திற்கு ஆந்திர அரசு கட்டி வரும் அணையை தடுத்து நிறுத்திட, தமிழ்நாடு அரசு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் வேலூர் தொகுதி வாக்காள பெருமக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பேராதரவுடன் களம் காணும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.