அரசியல்

“பொருளாதார நெருக்கடியைத் திசைதிருப்ப மதவெறியைத் தூண்டிவிடும் பா.ஜ.க அரசு”  : சீத்தாராம் யெச்சூரி சாடல்!

ஆழமான பொருளாதார நெருக்கடியைத் திசைதிருப்ப பா.ஜ.க அரசு மதவெறியைத் தூண்டிவிடுகிறது என சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

“பொருளாதார நெருக்கடியைத் திசைதிருப்ப மதவெறியைத் தூண்டிவிடும் பா.ஜ.க அரசு”  : சீத்தாராம் யெச்சூரி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்கிறது என பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் கூறிவந்தாலும் வளர்ச்சி விகிதம் நாளுக்கு நாள் குறைந்துவருவதாகச் சமீபத்தில் வந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறைக்குப் பொருளாதார வளர்ச்சிக்காக மோடி அரசு எடுத்த சில மோசமான நடவடிக்கைகளே காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், மீண்டும், மீண்டும் நஷ்டத்தை ஏற்படுத்தும் திட்டங்களையே மத்திய அரசு கொண்டுவருவதாகத் திட்டக்குழுவில் உள்ள உறுப்பினர்களே குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தனர். மேலும் பல ஊடகங்கள் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சொல்கிறது என புள்ளி விவரத்துடன் அம்பலப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஆங்கில நாளேட்டில் வெளிவந்த செய்தியை மேற்கொள் காட்டி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இந்தியாவின் பொருளாதாரம் மிக மிக ஆழமான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஜூன் மாதத்திற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பான புள்ளி விவரங்களின் படி இந்திய பொருளாதாரம் மேலும் 0.2 சதவீதம் அளவிற்குச் சரிந்துள்ளது என தெரிகிறது. இதனால் ஒவ்வொரு துறைகளும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. லைவ் மின்ட் நாளிதழ் இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான வாய்ப்பு கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை என தெரிவித்துள்ளது.

பொருளாதார பாதிப்பால் அன்றாட தேவைக்குக் கூட பொருள் ஈட்ட முடியாத அளவிற்கு மோசமான நிலையில் மக்கள் தவிக்கிறார்கள். கடந்த 2014ம் ஆண்டு முதல் கார்ப்பரேட்டுகளின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும் வகையில் மோடி அரசு விவசாயிகளையும், பொதுமக்களையும் நிர்க்கதியாக்கியுள்ளது.

ஏன், சிறு வணிகர்கள், தொழில் முனைவோரும் கூட இந்தச் சுழலில் தப்ப முடியவில்லை. அனைவரின் வளர்ச்சியையும் மோடி ஆட்சி சிதைத்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இந்த பொருளாதார நெருக்கடியை திசைதிருப்ப மோடி அரசு மதவெறிப் பாதையில் வேகமாகச் செல்கிறது”. என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories