வேலூர் மக்களவை தொகுதிக்கு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பலரும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது அவர் “தமிழ்நாட்டில் ஆளும் அ.தி.மு.க அரசு தற்போது ஒற்றைத் தலைமையா? அல்லது இரட்டைத் தலைமையா என்ற நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. மோடியின் எடுபிடியாக செயல்படும் அ.தி.மு.க அரசினால், தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க முடியவில்லை.
வேலூர் மாவட்டத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இடையே, எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லாமல் ஒன்றாக இணைந்து வாழ்கின்றனர். இந்தச் சூழல் தொடர்ந்து நீடிக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. ஆர்.எஸ்.எஸின் கருவியாக செயல்படும் பா.ஜ.க மதவெறியை தூண்டிவிட்டு, ஒற்றுமையாக இருக்கும் மக்களைப் பிரிக்க முயற்சிக்கிறது.
மோடி ஆட்சியில் அரசியலமைப்புச்சட்டம் துளியும் மதிக்கபடுவதில்லை. சிறுபான்மையினர்கள் மீதும், தலித் மக்கள் மீதும், இந்துத்துவா கும்பல்கள் கொலைவெறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனைத் தடுக்கவேண்டிய மத்திய பா.ஜ.க அரசு கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது அப்பட்டமாக மக்களுக்கு தெரிகிறது. மேலும், ஆர்.எஸ்.எஸ் மதவாத அமைப்பு தமிழகத்தில் காலூன்ற குறுக்குவழிகளில் முயற்சி செய்கிறது. அதற்கு அ.தி.மு.க துணை போகிறது.
பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் இணைந்து இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுகிறது. இவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். வேலூர் தொகுதியில் அ.தி.மு.க-வை தோற்கடிக்க வேண்டும். அதன் மூலம் அ.தி.மு.கவுக்கு கொடுக்கும் தோல்வி அடி, மோடிக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தை அதரித்து அனைவரும் வாக்களிக்க வேண்டும்”. என பேசினார்.