அனைத்து நதிநீர் நடுவர் மன்றங்களையும் ஒன்றாக இணைக்கும் வகையில், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் ஆணைய மசோதாவை இன்று மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்தன.
அந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திருமாவளவன் எம்.பி, ''இது மிகவும் உணர்ச்சிகரமான பிரச்சனை. இந்த சட்ட மசோதாவின் நோக்கம் மாநிலங்களுக்கு இடையிலேயான பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பதை விட மைய அரசுக்கு அதிகாரத்தைக் குவிப்பது என்பதில் முக்கியமானதாக இருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்புடையதாக இல்லை என்பது என்னுடைய கருத்து. பல தீர்ப்பாயங்களை எல்லாம் ஒன்றாக இணைத்து ஒரே தீர்ப்பாயம் (Single standing tribunal) என்று அமைத்து தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியவற்றை நியமிக்கக் கூடிய முழுமையான அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. மாநில அரசுகளுக்கு இதிலே எந்த அதிகாரமும் இல்லை.
தமிழகம் தான் இந்தியாவில் மிக அதிக அளவில் ஆற்றுநீர்ச் சிக்கலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலம். ஏனென்றால், இயற்கையிலேயே அது ஒரு தாழ்வான நிலப்பகுதியாக இருக்கிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களோடு அடிக்கடி இந்த ஆற்று நீர்ச் சிக்கல் ஏற்பட்டு, இதனால் வன்முறை ஏற்பட்டு தமிழர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்கிற நிலையில் நான் என்னுடைய கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
தென்னிந்திய மாநிலங்களை ஒருங்கிணைக்கிற வகையில் ஆற்று நீரை இணைக்கிற வகையில் நதிகளை இணைக்கிற வகையில் மத்திய அரசுக்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்கிற கேள்வியை நான் இங்கே எழுப்புகிறேன். ஏனென்றால் இது வெறும் சட்டம் சார்ந்த சிக்கல் அல்ல இதில் அரசியல் சிக்கலும் இருக்கிறது. அரசியல் தீர்வு காண்பதற்கு மத்திய அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது என்பதை நான் கேட்கிறேன். தென்னிந்திய நதிகளையாவது இணைப்பதற்கு மத்திய அரசு திட்டம் வைத்திருக்கிறதா? அதற்கான முயற்சியில் ஈடுபடுமா என்கிற கேள்வியை நான் எழுப்புகிறேன்'' இவ்வாறு தெரிவித்தார்.