மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை அடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார் எடியூரப்பா.
காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியின் மீதான அதிருப்தியால் 15 எம்.எல்.ஏக்களும் 2 சுயேட்சை உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமியால் பெரும்பான்மையால் நிரூபிக்க முடியாததால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர், கடந்த ஜூலை 26 மாலை எடியூரப்பாவை கர்நாடக மாநில முதலமைச்சராக அறிவித்து ஆளுநர் வஜூபாய் வாலா பதவி மற்றும் ரகசிய காப்புப் பரிமாணம் செய்து வைத்தார்.
இதனையடுத்து இன்று காலை கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், பாரதிய ஜனதா கட்சிக்கு 106 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததால் எடியூரப்பா வெற்றி பெற்றார்.
ஏற்கெனவே இருந்த 105 எம்.எல்.ஏக்களுடன் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. கூடுதலாக ஆதரவளித்ததால் சட்டப்பேரவையில் பா.ஜ.கவின் பலம் 106 ஆக உள்ளது.
முன்னதாக பேசிய சித்தராமையா, எடியூரப்பாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, மக்களுக்காக பணியாற்றுவார் என நம்புகிறேன் எனக் கூறினார். பின்னர் பேசிய குமாரசாமி, யாருக்கும் பதவி நிலையானது இல்லை. மக்களுக்காகப் பணியாற்றுங்கள் என தெரிவித்தார்.
இறுதியாகப் பேசிய எடியூரப்பா, யார் மீது பழிவாங்கும் செயலில் ஈடுபடமாட்டேன் எனத் தெரிவித்தார்.