ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிசந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 7 பேரும் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தண்டனை காலத்துக்கு மேல் சிறையில் இருப்பதால் தங்களை விடுவிடுக்குமாறு ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இவர்களது விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துவிட்டது.
இதையடுத்து ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பி வைத்தது. அந்த தீர்மானம் அனுப்பி ஓராண்டாகியும் இன்னும் அதன் மேல் எந்த நடவடிக்கையையும் ஆளுநர் எடுக்கவில்லை.
தனது மகன் இன்று வந்துவிடுவான் நாளை வந்துவிடுவான் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் நாள்தோறும் ஏங்கி வருகிறார். நீதி மீதும், மனிதாபிமானம் மீதும் நம்பிக்கை வைத்து போராட்டம் நடத்திய அற்புதம்மாளுக்கு இன்று வரை பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அற்புதம்மாளை அழைத்துக் கொண்டு விடுதலை சிறுத்தைகள் எம்.பி திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் எம்.பி ஆகியோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ”பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி 11 மாதம் ஆகியும் இதுவரை கருணை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு, தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட பிறகு "What is this?" என்ற அமித் ஷாவின் கேள்வி, அற்புதம்மாளை சற்று அதிர வைத்தது. பல்லாயிரம் முறை தனது மகன் படும் துன்பத்தையும், பேரறிவாளனுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் பற்றி கொட்டித் தீர்த்த அற்புதம்மாள், அமித் ஷாவின் அந்த கேள்விக்கும், சலிக்காமல் பதிலளித்தார். இம்முறையாவது தன் மகனுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு!
அமித்ஷா அப்படி ஒரு கேள்வி கேட்டது முட்டாள்தனம், ஒரு நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் நபருக்கு இது கூடவா தெரியாமல் இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.