கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி அரசில் இருந்து 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததாலும், 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதாலும் ஏற்பட்ட அரசியல் குழப்பம் இன்னும் தொடர்ந்து வருகிறது.
நேற்று முன் தினம் கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணிக்கு ஆதரவாக 99 எம்.எல்.ஏக்களும், பா.ஜ.கவுக்கு 105 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர்.
இதனால் அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் குமாரசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த அரசு வரும் வரை காபந்து முதலமைச்சராக குமாரசாமியை நீடிக்கும்படி ஆளுநர் வஜூபாய் வாலா வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், கர்நாடகாவில் ஆட்சி அமைக்க மாநில பா.ஜ.க தலைவர் எடியூரப்பா இன்று உரிமை கோருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இதுகாறும் எடியூரப்பா எந்த ஒரு நடவடிக்கையும் ஆட்சி அமைப்பது தொடர்பாக முன்னெடுக்கவில்லை.
அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காமல் இருப்பது ஒருபுறம் இருந்தாலும், பா.ஜ.க.வின் கொள்கைப்படி, கட்சியில் 76 வயதான எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோர அக்கட்சி மேலிடம் இன்னும் அனுமதிக்கவில்லை என பா.ஜ.க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
75 வயதுக்கு மேல் உள்ளவர்களை அரசு நிர்வாகத்தில் அமரவைக்கக் கூடாது என்று பா.ஜ.க கொள்கை முடிவு கொண்டிருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, இதனால் கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு எம்.பி. பதவி கூட வழங்காமல் வைத்துள்ளது பா.ஜ.க.
ஆட்சிக்காகவும், கட்சிக்காகவும் ‘ஆபரேஷன் கமலா’ உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட்ட எடியூரப்பாவை ஆட்சியமைக்க விடாமல் கட்சி மேலிடம் தடுத்திருப்பது அவரது ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கர்நாடக பா.ஜ.க நிர்வாகிகளிடம் அமித்ஷாவும், ஜே.பி.நட்டாவும் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.