கர்நாடக மாநிலத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை, எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை குறுக்கு வழியில் கவிழ்த்த பா.ஜ.க. தற்போது அங்கு ஆட்சி அமைக்க ஆயத்தமாக்கி வருகிறது.
கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து, மேற்கு வங்காளத்திலும், மத்திய பிரதேசத்திலும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக மத்திய பிரதேச பா.ஜ.க தலைவர் பேசி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. மொத்தமுள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்தாண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களையும், பா.ஜ.க 109 இடங்களையும் பெற்றது.
பெரும்பான்மைக்கு 116 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் 2 உறுப்பினர்கள், சமாஜ்வாதி கட்சியின் 1 உறுப்பினர், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேரின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதன்மூலம், ஒரு சில எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாக தான் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.
இந்த சூழலில் பா.ஜ.க தலைவர் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார், அந்த சந்திப்பின் போது அவர் கூறியது மத்திய பிரதேச அரசியலில் பெரும் சர்ச்சையும், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க-வின் மத்திய பிரதேச மாநிலச் செயலாளராகவும், எதிர்க்கட்சித் தலைவர் இருக்கும் கோபால் பார்கவா செய்தியாள்களிடம் கூறியதாவது, “கர்நாடகாவில் இருந்த அரசியல் சூழலைக் காட்டிலும், மத்திய பிரதேசத்தில் மோசமான நிலையில் தான் உள்ளது. எங்கள் கட்சியின் தலைமையிடம் இருந்து சிக்னல் கிடைத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் கமல்நாத் அரசைக் கலைத்துவிடுவோம்” என வெளிப்படையாக எச்சரிக்கை விடும் வகையில் அவர் பேசியுள்ளார்.
இதற்கு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “உங்கள் கட்சித் தலைமைக்கு மத்திய பிரதேசத்தின் தன்மைக் குறித்து தெரியும். அதனால்தான் எந்தவித உத்தரவையும் தராமல் அமைதியாக உள்ளனர். எப்போது வேண்டுமானாலும் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரலாம். மேலும் இங்குள்ள காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் விலைபோகமாட்டார்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற கிரிமினல் சட்டத் திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் இருவர் வாக்களித்ததள்ளனர். இது பா.ஜ.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய முதல்வர் கமல் நாத், “பா.ஜ.க-வினர் எங்களது அரசை மைனாரிட்டி அரசு என்று தினம்தோரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேரே எங்களை ஆதரித்துள்ளனர். உங்களின் வழக்கமான குதிரைபேர அரசியலை இங்கு செய்யவேண்டாம்” என அவர் எச்சரித்துள்ளார்.