கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து நாளை ஆட்சி அமைக்க எடியூரப்பா உரிமை கோருகிறார்.
“ஜனநாயகத்தின் தோல்வி; நேர்மையின் தோல்வி; கர்நாடக மக்களின் தோல்வி!”
- ராகுல் காந்தி ட்வீட்
“எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்க முடியாது என்கிற உண்மையை பா.ஜ.க ஒருநாள் உணரும். அவர்களின் அனைத்து பொய்களும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும். அதுவரை இந்நாட்டின் குடிமக்கள் அவர்களின் ஊழல்களைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்”
- பிரியங்கா காந்தி
காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணிக்கு எதிராக வாக்களித்த பி.எஸ்.பி கட்சியின் ஒரே கர்நாடக எம்.எல்.ஏ மஹேஷை கட்சியில் இருந்து நீக்கினார் மாயாவதி. காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க உத்தரவிட்டும், எதிர்த்து வாக்களித்ததால் நடவடிக்கை எடுத்ததாக மாயாவதி அறிவிப்பு.
குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, ஆட்சி அமைப்பது பற்றி உடனடியாக பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடை பெற இருக்கிறது. மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்த பின், ஆளுநரை சந்திக்க இருப்பதாக எடியூரப்பா அறிவிப்பு.
ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்து எப்படி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிருப்தி தெரிவித்து, ஆட்சி கவிழ காரணமாக இருந்தனரோ, அதே போல் குமாரசாமியும் காங்கிரஸ் ஆட்சியை கவிழச் செய்திருக்கிறார். 2004-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. இரு கட்சிகளுக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் ஆட்சி என ஒப்பந்தம் செய்யப்பட்டது. காங்கிரஸின் என்.தர்மசிங் முதல்வராக பதவியேற்றார். ஆனால், ம.ஜ.த தொடர் நெருக்கடி கொடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் மா.ஜ.த எம்.எல்.ஏக்களை பிரித்து 2006-ம் ஆண்டு ஆட்சியை கவிழ்த்தார் குமாரசாமி.
பின் எடியூரப்பாவுடன் இணைந்து ஆட்சியமைத்தார். இந்த முறை குமாரசாமி முதல்வர், எடியூரப்பா துணை முதல்வர். தலா 20 மாதங்கள் இரு கட்சியும் ஆட்சி செய்யும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. 20 மாத முடிவில் குமாரசாமி எடியூரப்பாவிடம் ஆட்சியை ஒப்படைக்காததால், கூட்டணி முறிந்தது. ஆட்சியும் கவிழ்ந்தது.
அன்று குமரசாமி செய்தது, இன்று அவருக்கே மீண்டும் நடந்திருக்கிறது. இந்த இரண்டிலும் பா.ஜ.கவின் ஆப்ரேஷன் 'கமலா'வை பா.ஜ.க கையிலெடுத்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார் குமாரசாமி.
மோடி அரசாங்கம் மனிதர்களின் பலவீனத்தை விலை பேசுகிறது; ஜனநாயக நாட்டில் இது ஏற்புடையதல்ல. பா.ஜ.க ஆளுநர் அதிகாரத்தையும், பண பலத்தையும் பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்துள்ளது.
- கே.எஸ்.அழகிரி, தமிழக காங். தலைவர்
கர்நாடக மாநிலத்தில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2019 வரை 5 சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. அவற்றில் இரண்டு தேர்தல்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் இருந்திருக்கிறது. இந்த 20 ஆண்டு கால கட்டத்தில் 10 முறை முதல்வர்கள் மாறியுள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்த 13 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நாளை கர்நாடகம் திரும்ப உள்ளதாக தகவல்.
ஜனநாயகத்திற்கு நிகழ்ந்த தற்காலிக தோல்வி. அரசியலமைப்பு விரோத, ஜனநாயக விரோத, ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க-வின் சதி மூலம் கர்நாடகா அடைந்துள்ள தோல்வி இது.
- கர்நாடக காங்கிரஸ் ட்வீட்
கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து, இன்னும் 2 நாட்களை ஆட்சி அமைக்க ஆளுநரை சந்திக்க இருப்பதாக பா.ஜ.க தரப்பு தகவல்.
சட்டசபையில் சபாநாயகர் முன்னிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினமா செய்து கையெழுத்திட்டார் ஹெச்.டி.குமாரசாமி. ஆளுநரை சந்திக்க நேரம் கேடிருக்கிறார்.
பா.ஜ.க தலைவர் எடியூரப்பா புதிதாக ஆட்சியமைக்க ஆளுநரை சந்திக்க வாய்ப்பு.எடியூரப்பா ஆட்சியமைத்தாலும், அவர் மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானதால், குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றதாக சபாநாயகர் அறிவிப்பு!
காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மணி அடிக்கப்பட்டு அவையின் கதவு மூடப்பட்டு, வாக்கெடுப்பு துவங்கியது. குரல் வாக்கெடுப்பு முடிந்து பகுதி வாரியாக பிரித்து வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
அனைத்து எம்.எல்.ஏ-க்களும் சபைக்குள் வரவேண்டும் என சபாநாயகர் உத்தரவு!
முதல்வர் குமாரசாமியின் உரையைத் தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.
விவாதத்தை முடித்துவிட்டு வாக்கெடுப்பை கண்டிப்பாக நடத்துவோம், அப்படியே செல்பவன் நான் அல்ல!
- சட்டப்பேரவையில் குமாரசாமி பேச்சு
சமூக ஊடகங்களில் என்னைப் பற்றி அவதூறு கூறுவதற்காகவா நான் முதல்வரானேன்? இதையெல்லாம் விட நான் மகிழ்ச்சியுடன் எனது பதவியை ராஜினாமா செய்வேன்.
- கர்நாடக முதல்வர் குமாரசாமி உருக்கம்!
மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறேன். நாங்கள் தள்ளுபடி செய்த அனைத்து கடன்களின் விவரமும் அரசின் இணையதளத்தில் உள்ளது. தனியார் வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க ரூ.1700 கோடி ஒதுக்கியுள்ளோம்.
- குமாரசாமி உருக்கமான பேச்சு!
நான் வாக்கெடுப்புக்கு தயாராக உள்ளேன். வாக்களித்த மக்களை அரசு புறக்கணிக்கவில்லை. இதுவரை நான் அரசின் வாகனத்தைக் கூட பயன்படுத்தவில்லை. என் மீதான புகாருக்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள், பதில் அளிக்கிறேன்.
- குமாரசாமி பேச்சு
“தொடர்ச்சியாக பா.ஜ.க என்னை ஊழல்வாதி என்று குற்றம்சாட்டி வருகிறது. இதற்கான எந்த ஆதாரமும் அவர்களிடம் கிடையாது. ஆனால், பல நூறு கோடி ஊழல் செய்த பா.ஜ.க தற்போது பின்வாசல் வழியாக ஆட்சியமைக்க முயற்சித்து வருகிறது.”
- குமாரசாமி பேச்சு
விதான் சவுதாவுக்கு வெளியே காங்கிரஸ் - பா.ஜ.க தொண்டர்கள் மோதல் : பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்!
“தவறுகளை சரி செய்யும் நேரம். நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நன்றி. ஆறு கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” : குமாரசாமி உருக்கம்
“ஆறு கோடி மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்” : குமாரசாமி