கர்நாடக சட்டசபையில், குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மீது இரண்டாவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தியே ஆகவேண்டும் என பா.ஜ.க முரண்டுபிடித்தது.
கர்நாடக முதல்வர் குமாரசாமியோ, அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அரசு மீது அதிருப்தியில் இருப்பதற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும். பா.ஜ.க அவர்களைக் கடத்தி வைத்துள்ளது எனக் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே, பா.ஜ.க-வினரின் அழுத்தத்தின் காரணமாக நேற்று முன்தினம் சபாநாயகருக்கு ‘நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தவேண்டும்’ எனக் கடிதம் எழுதிய கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, நேற்று முதல்வர் குமாரசாமிக்குக் கடிதம் எழுதினார்.
அதில், கர்நாடக பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார் ஆளுநர் வஜுபாய் வாலா. பா.ஜ.க-வின் அழுத்தத்தின் காரணமாக அரசை நிர்ப்பந்திக்கும் ஆளுநரின் இந்தச் செயல் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.
இதுகுறித்து பேசிய முதல்வர் குமாரசாமி, “குதிரை பேரம் நடக்க வாய்ப்புள்ளதால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என ஆளுநர் என்னை நிர்பந்தித்துள்ளார். ஆனால், பா.ஜ.க-வினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக நாங்கள் புகாரளித்தபோது ஆளுநருக்கு தெரியவில்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்த முடிவை சபாநாயகரிடமே விட்டுவிடுகிறேன். இந்த விஷயத்தை டெல்லி இயக்காது. ஆனால், ஆளுநர் அனுப்பும் கடிதங்களிலிருந்து என்னைப் காப்பாற்றுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
அவையை கூடுதலாக இரண்டு மணி நேரம் அதிகமாக நடத்தி இன்றே விவாதத்தை நடத்த சபாநாயகர் கூறினார். அதற்கு, அனைவரும் தொகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்பதால் அவையை ஒத்திவைக்க கோரி காங்கிரஸ், ஜே.டி.எஸ் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
அப்போது பேசிய முதல்வர் குமாரசாமி, உறுப்பினர்கள் தொகுதிக்கு செல்ல வேண்டும் என்பதால் அவையை ஒத்தி வைக்க வேண்டும், அனைத்து உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என சபாநாயகர் கேள்வி எழுப்பினார். திங்கள்கிழமை எங்களது அமர்வை முடித்துக் கொள்கிறோம் என முதல்வர் பதிலளித்தார்.
தொடர்ந்து அவை ஒத்திவைப்பு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இதையடுத்து, கர்நாடகா சட்டப்பேரவை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்றும் நடைபெறவில்லை.