ஆந்திர மாநிலம் கடந்த 2014ம் ஆண்டு பிரிக்கப்பட்டு தெலங்கானா உருவாக்கப்பட்டது. இதனையடுத்து, தெலங்கானா மாநிலத்திற்கு ஹைதராபாத் தலைநகரமாக ஆனது. இதனால் ஆந்திரா மாநிலத்திற்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனால் கிருஷ்ணா நதிக்கரையோரம் குண்டூர் மற்றும் கிருஷ்ணா மாவட்டத்தின் இடையில் அமராவதி எனும் பெயரில் புதிய தலைநகரை நிறுவதற்கு அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சிகள் மேற்கொண்டார்.
அதற்காக விவசாயிகள் தங்களின் நிலத்தை தருவதற்கு முன்வந்தனர். அதன் அடிப்படையில் 33 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் அரசுக்கு வழங்கினார்கள். மேலும் அவர்களுக்கு அப்போதைய அரசு மதிப்பீட்டின்படி அந்த நிலங்களுக்கு பணம் வழங்கப்பட்டது.
கூடுதலாக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு தலைநகர் அமையும் பகுதியிலேயே, வீடுகள் அல்லது வணிக ஏற்பாடுகள் செய்துக் கொடுப்பதாக ஒப்பந்தமும் போடப்பட்டது.
அதனை அடுத்து அந்த நிலத்தில் தற்காலிக சட்டப்பேரவை கட்டப்பட்டது. மேலும் புதிய தலைநகர் அமைப்பதற்கு ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து நிபுணர் குழு வரவழைக்கப்பட்டு, மாதிரி தலைநகரும் அதற்கான கட்டுமான இடங்களும் தீர்மானிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை இழந்தது, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
முன்னதாக தலைநகர் அமைப்பதற்கு விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்களை அரசு கைப்பற்றியுள்ளது என ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் சிவசேனா போன்ற கட்சிகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி முறையிட்டனர்.
கூட்டணியில் இருந்து விலகிய சந்திரபாபு நாயுடுக்கு அளிக்கப்பட்ட ஆதரவையும் பா.ஜ.க அரசு திரும்ப பெற்றதுடன் உலக வங்கி சிபாரிசு கொடுத்த கடிதத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இது சந்திரபாபு நாயுடுவை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
புதிய தலைநகர் அமைவதற்கு, உலக வங்கி முதற்கட்டமாக 300 மில்லியன் டாலர், அதாவது ரூ. 2 ஆயிரம் கோடி வழங்க முடிவு செய்தது. பின்னர் கடன் வழங்குவதற்கு முன்பு உலக வங்கி அமராவதியில் ஆய்வுகளை மேற்கொண்டது.
இந்நிலையில் மத்திய அரசு அளித்த கடிதத்தை திரும்ப பெற்றதால், உலக வங்கி கடன் அளிக்கச் சம்மதித்த முடிவை திடீரென கடன் உதவி நிறுத்தப்பட்டுவிட்டதாக உலக வங்கி தனது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இது ஆந்திரா மக்களிடையே பெரும் அதிச்சியாக அமைந்தது.
மேலும் எதிர் கட்சியாக இருந்த போது ஜெகன்மோகன் ரெட்டி செய்த புகார், தற்போது அவர் ஆட்சிகே பெரும் பாதகமாக அமைந்துள்ளது. மேலும் உலக வங்கி தர மறுத்த கடன் உதவியை, தாங்கள் மீண்டும் புதிதாகக் கேட்டு விண்ணப்பித்து வருவதாக ஜெகன்மோகன் ரெட்டி சொல்லியுள்ளார். இதனை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக கண்டித்து டிவிட்டரில் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர்களின் அலட்சியம் தான் உலக வங்கியில் இருந்து கடன் கிடைக்காமல் போனது. மேலும் இந்த திட்டத்தை கொண்டுவந்த நாள் முதல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளை தூண்டி விட்டு பொய் வழக்குகளை பதிய வைத்துள்ளனர். அமராவதி திட்டத்தை ஒரே அடியாக நிறுத்திவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து மற்றோரு டிவிட்டரில், இந்த அரசு ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிந்து அமராவதி திட்டத்தையும், போலவரம் திட்டத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. அந்த திட்டத்தை எடுத்து முடிப்பதற்கான திறமை அவர்களிடம் இல்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கொண்டுவந்த திட்டத்தை நிறுத்த வேண்டும், அவ்வளவுதான்.
மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர்களால் முதலீடு செய்ய நினைத்தவர்கள் பின்வாங்கியுள்ளனர். கடுமையான வேலையின்மை பிரச்னை நிலவி வருகிறது இதை சட்ட சபையில் பேச நினைத்தால் ஓடி விடுகிறார்கள், மக்கள் பிரச்சனையை விவாதிக்கும் போது ஓடினால் மக்கள் யாரை நம்புவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.