உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கோராவால் பகுதியில் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக சபாஹி கிராமத் தலைவர் யக்யா தத்க்கும், மற்றொரு கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறி கொலைக் குற்றத்தில் முடிந்துள்ளது.
பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய அண்டை மாநிலங்களை எல்லையாக கொண்டுள்ளது உ.பி-யின் சோன்பத்ரா பகுதி. அங்கு, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு சொந்தமான நிலம் இருந்துள்ளது. அதில், விவசாய பணியை நடத்த கிராம மக்கள் அனுமதிக்காமல் பல ஆண்டுகளாக தடுத்து வந்ததால் கிராமத் தலைவர் யக்யா தத்துக்கு அந்த இடத்தை விற்றுவிட்டார்.
இதனையடுத்து, யக்யா தத் துப்பாக்கி ஏந்திய தனது ஆட்களுடன் நிலத்திற்கு வந்தபோது கிராம மக்கள் உள்ளே நுழைய அனுமதிக்காததால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, யக்யா தத்தின் ஆதரவாளர்கள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதால் மூன்று பெண்கள் உட்பட 9 கிராம மக்கள் சம்பவ இடைத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து கிராமத் தலைவர் யக்யா தத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தப்பிச் சென்றனர். இதனையடுத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி சென்றிருந்தார். அப்போது அவரைப் பார்க்கவிடாமல் மாவட்ட நிர்வாகமும், போலீஸாரும் தடுத்துள்ளனர். அனுமதி மறுக்கப்பட்ட்டத்தைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் நாராயண்பூரில் ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏறபட்டுள்ளது.
உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு ராகுல் காந்தி கடும் கண்டம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது, “ சோன்பத்ராவில் சட்டமீறலாக பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்திருப்பது கவலையளிக்கிறது.
தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்து வெளியேற மறுத்ததற்கு சுட்டுக் கொல்லப்பட்ட 10 பழங்குடியினரின் குடும்பத்தாரை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேச அரசின் அதிகார வரம்புமீறலாகும். உத்தர பிரதேச மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.