நாடாளுமன்றத்தில் ஜூலை 15ம் தேதியன்று தேசியப் புலனாய்வு முகமை(NIA) திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் சொல்லப்பட்டிருகும் திருத்தங்கள், மாநிலப் பட்டியலில் இருக்கும் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை மத்திய அரசு தன் கையில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்நிலையில், இந்த மசோதாவின் மீது இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார்.
முன்னதாக தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) குறித்து அசாதுதீன் ஒவைசி பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ தற்போது என்.ஐ.ஏ-க்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் தேசியப் புலனாய்வு முகமை திருத்த மசோதா கொண்டுவருவதன் அவசியம் என்ன, மேலும் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு தற்போது என்ன தேவை ஏற்பட்டுள்ளது” என கேள்வியெழுப்பினார்.
மேலும், “ அமெரிக்காவையும், இஸ்ரேலையும் ஒப்பிட்டு இந்தியாவை பார்க்கக்கூடாது, இந்தியாவின் நிலை என்பது வேறானது” என அவர் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க எம்.பி. சத்யபால் சிங், “ சில தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் போது ஹைதரபாத் காவல்துறை ஆணையரை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அம்மாநில அரசு வற்புறுத்துகிறது. இதுபோன்ற நடவடிக்கையால் சில தனிப்பட்ட அதிகாரிகளை கணக்கில் கொண்டு இந்த மசோதா கொண்டுவரப்பட்டது” என்று குறிப்பிட்டார்.
இதனை அடுத்து பேசிய ஒவைசி, இது அதிகாரப்பூர்வமற்ற தகவல் எனவும், பா.ஜ.க அரசு ஆதாரத்துடன் எதையும் பேச வேண்டும் என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அமித்ஷா, உங்கள் மனதில் அச்சம் இருந்தால் அதற்கு அரசு என்ன செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார். ஒவைசியை மதத்துடன் தொடர்புபடுத்தி குற்றவாளிகளிடம் பேசுவது போல அமித்ஷா பேசிவருகிறார் என எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியானது.
இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஒவைசி , “ பா.ஜ.க அரசுக்குp பிடிக்காதவர்களை தேசவிரோதிகள், தீவிரவாதிகள் என முத்திரை குத்துவதை பா.ஜ.க எம்.பி-க்கள் கையாள்கிறார்கள். இது ஆபத்தான போக்கு. அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசுகையில் கைகளை நீட்டி மிரட்டும் தொனியில் பேசுகிறார்.
அவரின் இதுபோன்ற நடவடிக்கைக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. அவரை பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன கடவுளா? அவர் வெறும் உள்துறை அமைச்சர் தான்” என்று தெரிவித்துள்ளார்.