முதுகெலும்பில்லாத கோழைத்தனமாக ஆட்சி தமிழகத்தில் நடப்பது வெட்கக் கேடானது என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ம.தி.மு.0க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்த போது பேசுகையில், “ நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக அரசு மோசடி நாடகம் ஆடியுள்ளது. மத்திய அரசு தமிழக அரசை கால்மிதி போன்று பயன்படுத்தி வருகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசும் கொத்தடிமையாக செயல்பட்டு வருகிறது” என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
“ ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களும், கிராமப்புற மக்களும் அதிகளவில் பணம் செலவழித்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாது. நீட் தேர்வால் 6 உயிர்கள் போய் விட்டன.
சமூக நீதி என்ற பெயரில் தமிழகத்தை முழுக்க முழுக்க ஒரு வழி செய்துவிட வேண்டும் என்றே மத்திய பா.ஜ.க அரசு முயற்சித்து வருகிறது. நீட் தேர்வின் பெயரில் நம் தமிழக மக்களின் தலையில் கல்லைப் போட்டுள்ளனர். தமிழக மக்களை கிள்ளுக்கீரையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ மாநிலத்தில் முதுகெலும்பில்லாத கோழைத்தனமான அரசாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை தமிழகத்துக்கு சாபக்கேடுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆஜரான வைகோ, நீதிபதியிடம் வருகிற 22ம் தேதி டெல்லிக்கு செல்ல வேண்டும். எனவே வழக்கு தொடர்பாக வாதாட வரும் வெள்ளியன்று 1 மணிநேரம் வாய்ப்பு தர வேண்டும் என கோரியுள்ளார்.
அதற்கு நீதிபதி, ஸ்டெர்லைட் தரப்பு மற்றும் அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த பின்னரே அனுமதிக்க முடியும் எனக் கூறினார். இதனையடுத்து பேசிய வைகோ, மாநிலங்களவை எம்.பி ஆக பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டி உள்ளதால், விசாரணை அன்று இங்கு இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.