வேலூர் தொகுதியில் 4 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த ஞானசேகரன், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து இன்று தி.மு.க-வில் இணைந்தார்.
ஞானசேகரன் 1991 முதல் 2011 வரை தொடர்ந்து 20 ஆண்டுகள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். ஜி.கே.வாசன் ஆதரவாளராக இருந்த அவர் ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கியதும் தமிழ்நாடு மாநில காங்கிரஸில் சேர்ந்தார்.
த.மா.க சார்பில் 2011 சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து அ.தி.மு.க.வில் இணைந்த அவர் தினகரன் தனிக்கட்சி தொடங்கியதும் மாநில அமைப்பு செயலாளராக அ.ம.மு.க.வில் பணியாற்றினார்.
இந்நிலையில், அவர் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்துள்ளார். தினகரனுடனான கருத்து மோதல்களைத் தொடர்ந்து அ.ம.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த பலர் அக்கட்சியை விட்டு விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
நடந்து முடிந்த தேர்தல்களில் பலத்த தோல்வியைச் சந்தித்த அக்கட்சி நிர்வாகிகள் அ.ம.மு.க-வின் வாக்கு வங்கியைப் புரிந்துகொண்டு அரசியலில் நிலைத்திருப்பதற்காக தி.மு.க உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இது தினகரனின் செல்வாக்கு அரசியல் களத்தில் வெகுவாகச் சரிந்து வருவதையே உணர்த்துகிறது.