கர்நாடகாவில் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை நீடிக்கவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் உறுப்பினர்களை மூளைச்சலவை செய்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார் பா.ஜ.க.,வின் எடியூரப்பா.
இதனையடுத்து, கூட்டணி அரசின் மீது அதிருப்தி உள்ளதாகக் கூறி காங்கிரஸின் 13 எம்.எல்.ஏ.,க்களும், மஜதவின் 3 எம்.எல்.ஏ.,க்களும் ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காததை அடுத்து 10 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள் வரும் செவ்வாய்க் கிழமை (ஜூலை 16) வரை கர்நாடக மாநில அரசு தற்போது உள்ள நிலையே தொடரவேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக உள்ளதாக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். எனவே மும்பையில் முகாமிட்டிருந்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூருவுக்கு திரும்பி வருகின்றனர். ஒருபுறம், அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், குமாரசாமி உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சட்டப்பேரவை குழுவிடம் பா.ஜ.க சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, வருகிற ஜூலை 18ம் தேதி காலை 11 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பதாக அம்மாநில சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார்.
சபாநாயகரின் இந்த அறிவிப்பு கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி தொடருமா ? அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் என்ன செய்யப் போகிறார்கள்? பா.ஜ.க.,வின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.