கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ம.ஜ.த கூட்டணி அரசை கவிழ்ப்பதற்காக பா.ஜ.க பல்வேறு ராஜதந்திரங்களை பயன்படுத்தி வருகிறது. அதில் தற்போது நிலவும் அரசியல் குழப்பங்களால் அம்மாநிலத்தில் பதற்றமும், பரபரப்பும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 11 பேரும், மஜதவில் 3 எம்.எல்.ஏக்களும், 2 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்துள்ளனர். அதில் 10 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர்.
அவர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் மும்பைக்கு விரைந்த கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாரை ஓட்டலுக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காததால் அவரது முடிவுக்கு எதிராக மும்பையில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்கள் 10 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் விசாரித்த போது, எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து பதில் அளிக்க கர்நாடக சபாநாயகர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு தொடர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 10 பேரும் இன்று மாலை 6 மணிக்கு சபாநாயகர் முன் ஆஜராக உத்தரவிட்டு எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடக டிஜிபிக்கும் ஆணையிட்டு வழக்கு விசாரணையை நாளை (ஜூலை 12) ஒத்திவைத்தனர்.
இதனையடுத்து மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு விமானம் மூலம் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் விரைகின்றனர்.