தமிழகத்தில் நிலவிவரும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, தமிழக மக்களை சுயநலம் மிகுந்தவர்கள்; கோழைகள் என விமர்சித்தது தமிழக மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
கிரண்பேடியின் இந்தக் கருத்துக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், கிரண்பேடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தி.மு.க-வினர் நேற்று புதுவை ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று கிரண்பேடியின் கருத்து குறித்து மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, புதுச்சேரி ஆளுநர் ஒரு ட்வீட்டில் தமிழக மக்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் கேலி செய்துள்ளார். அரசாங்கம் அவரது கருத்தை ஒப்புக்கொண்டால், அது அவரை ஆதரிக்கிறது என்று அர்த்தம் என கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், '' தண்ணீர் பிரச்சனை தொடர்பாக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தமிழக மக்கள் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுவை மக்கள் மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் கிரண்பேடி தெரிவித்தார் '' என ராஜ்நாத் சிங் கூறினார்.