திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ளது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும், வழக்கறிஞராகவும், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் உள்ள வைகோ நாடாளுமன்றத்திலும் பல்வேறு சாதனைகளை புரிந்து மக்கள் பிரச்னைகளை தனக்கே உரிய பாணியில் கர்ஜித்தவர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவரை, வைகோவின் பணி மத்தியில் தேவை என்று சொல்லி முதன்முதலில் 1978ம் ஆண்டு மாநிலங்களவைக்கு அனுப்பிவைத்தவர் தலைவர் கலைஞர். அப்போது தமிழகத்தின் அடிப்படை தேவை மற்றும் பிரச்னைகளை திறம்பட விவரித்தும், வாதிடவும் செய்தார். அவரது கணீர் பேச்சுக்காகவே அவை உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற காலமும் உண்டு.
இதைத்தொடர்ந்து 1984ம் ஆண்டிலும், 1990ம் ஆண்டிலும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார் வைகோ. சுமார் 18 ஆண்டுகள் ராஜ்ய சபா எம்.பியாக இருந்தபோது, அவருக்கு நாடாளுமன்ற புலி என்பதுதான் அடைமொழி. பின்னர், 1998ல் நடந்த மக்களைத் தேர்தலின் போது சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார். அதனைத் தொடர்ந்து 2004 வரை லோக் சபா உறுப்பினராக 2 முறை பணியாற்றினார்.
இந்நிலையில், நடந்து முடிந்த 17வது மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையில் கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க.,வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்கப்படும் என ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது ம.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு வைகோ போட்டியிடுவதாக அக்கட்சியின் உயர் நிலைக்குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 23 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் வைகோவின் குரல் ஓங்கி ஒலிக்க இருக்கிறது. இது மட்டுமில்லாமல் முதன்முதலில் தலைவர் கலைஞர் அவர்களால் மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்ட வைகோ தற்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால் மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் மதவாதம் மற்றும் நாட்டின் ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் பா.ஜ.க அரசு இருக்கும் சூழலில், நாடாளுமன்றத்தில் வைகோ அக்கட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.