கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி அமைத்து வருகிறது. ம.ஜ.தவின் குமாரசாமி முதலமைச்சராக ஆட்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில், கர்நாடக அரசை கவிழ்ப்பதற்காக அம்மாநில பா.ஜ.க குதிரை பேரத்தை நடத்தி வருகிறது.
அதற்காக பா.ஜ.க காய் நகர்த்தி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனந்த் சிங் இன்று காலை தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து, கர்நாடக கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏவான ரமேஷ் ஜர்கிஹோலியும் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கர்நாடகாவில் எப்படியாவது ஆட்சியை பிடித்தவிட வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.கவினர் காங்கிரஸ் அல்லது ம.ஜ.த கட்சியில் உள்ள எம்.எல்.ஏக்களின் பலத்தை குறைத்து வருகின்றனர். தற்போது காங்கிரஸின் 2 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.