தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவி வகிக்கும் கிரிஜா வைத்தியநாதனின் பதவிக் காலம், வரும் 30ஆம் தேதியுடன் முடியவிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த தலைமை செயலாளராக, தமிழக ஆளுநரின் தனி செயலாளர் ராஜகோபால் வர வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ராஜகோபால் முன்னர் செய்த சில விவகாரங்கள், அதற்கு தடையாக மாறியிருக்கின்றன.
1984 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், 2014ஆம் ஆண்டு டெபுடேஷனில் டெல்லிக்கு சென்றார். அதன் பின்னர் கடந்த 2017 நவம்பர் 28 ஆம் தேதி ஆளுநரின் புதிய செயலாளராக நியமிக்கபட்டார்.
தமிழக அரசின் தலைமை செயலாளர் பதவிக்கு இவரின் பெயரும் அடிபடவே, இவரை அந்த பதவியில் அமரவைக்க வேண்டாம், என தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் வைத்த கோரிக்கை டெல்லி வரை சென்றுள்ளது.
டெல்லி அதிகாரிகள் தரப்போ, "எங்களுக்கும் வேண்டாம், தமிழகத்திலேயே அவரை வைத்து கொள்ளுங்கள்" என்று சொல்லியிருக்கிறார்கள். ராஜகோபால் என்ற பெயரைக் கேட்டதுமே அதிகாரிகள் சற்று தயங்க முக்கிய காரணம், மாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவி விவகாரத்தில், இவரது பெயரும் சிக்கியது தான்.
நிலைமை இப்படி இருக்க, தலைமை செயலாளர் பதவியை எப்படியும் பிடித்து விட வேண்டும் என, தொடர்ந்து பல வழிகளில் முயற்சி செய்தாராம் ராஜகோபால். ஆனால், அந்த முயற்சி பயனளிக்கவில்லை என்கிறது டெல்லி அதிகாரிகள் வட்டாரம். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில், ராஜகோபாலின் மனைவியான மீனாட்சி ராஜகோபால் ஐ.ஏ.எஸ் புகார் ஒன்றை அளித்த பின்னரே இவரை டெல்லிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.