இந்தியாவில் தனிநபரை அடையாளப்படுத்துவதற்கு ஆதார் எண்ணை இந்திய அரசு பயன்படுத்துகிறது. மேலும் அரசு வழங்கும் நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் ஆதார் இல்லாத மக்கள், நலத்திட்ட உதவிகளை பெற முடியாது எனும் நிலை உருவானதால் எதிர்ப்பும் கிளம்பியது.
மேலும் வங்கி கணக்கு தொடங்குவது, சிம் கார்டு வாங்குவது போன்றவற்றிற்கு ஆதார் கட்டாயம் என எனும் நிலையில், ஆதாரை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு ஆதார் கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
ஆனாலும் மத்தியஅரசு வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்ற அவசர சட்டத்தை கொண்டு வரவுள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.
இதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரவிசங்கர் பிரசாத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, ”மத்திய அரசின் மானிய திட்டங்களுக்காக ஆதாரை பயன்படுத்தலாம். ஆனால் தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று 2018ல் உச்சநீதிமன்ற நீதிபதி புட்டசுவாமி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பை இந்த மசோதா மீறுவதாக உள்ளது.
தனியார் நிறுவனங்கள் சேமித்து வைத்துள்ள ஆதார் தகவல்களை இனிமேல் நீண்ட காலம் வைத்திருக்கக் கூடாது, அதை அழிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. ஆனால் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்பது தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
இந்த மசோதாவால் ஆதார் வைத்திருப்பவர்களின் பாதுகாப்பு, தனியுரிமை மீண்டும் கேள்விக்குறியாகியிருக்கிறது. தனியார் நிறுவனங்கள், கேஒய்சி (Know Your Customer) சார்ந்த செயல்பாடுகளுக்கு மட்டும் ஆதாரை பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதிலும் பரிவர்த்தனை மோசடிகளும், தனிநபர் நலன் உட்பட, தனிநபர் தகவல்கள் திருடப்பட்டதும் பல இடங்களில் நடந்தன. இதுபோன்ற பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு எல்லாம் மத்திய அரசோ, ஆதார் வழங்கும் 'உதய்’ (UIDAI) அமைப்போ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.
மேற்கொண்டு தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் எண் பெற அனுமதி அளித்தால் மோசடிகள் மேலும் பெருகும். குடிமக்களுடைய தரவுகள் திருடப்படும். தற்போது தாக்கல் செய்துள்ள மசோதாவுக்காக யாருடைய ஆலோசனைகளும் பெறப்படவில்லை. எனவே இம்மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்யவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவனும் இந்த ஆதார் மசோதாவை நிறைவேற்றக்கூடாது, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பவேண்டும் என வலிறுத்தி மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.