டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்.
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பஞ்சம் குறித்து எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிறிது நேரத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு தினசரி மூன்று வேளை தண்ணீர் சப்ளை செய்யப்படும் தகவல் வெளியானதைத் தொடர்ந்து இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், எம்.பி-யுமான ஓ.பி.ரவீந்திரநாத்திடம் கேட்கப்பட்டதற்கு அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என மழுப்பினார் அவர்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்குரிய நிதியை மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்ததாகத் தெரிவித்தார்.
வறட்சி காரணமாக குடிநீர் ஆதாரங்கள் பொய்த்துவரும் நிலையில், கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்கு மத்திய அரசின் நிதியை குறைத்துள்ளதை மாற்றி கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டும் எனக் கோரியதாகவும் கூறினார்.
அ.தி.மு.க-வின் இரண்டு தலைமைகளுக்குள் பனிப்போர் தொடர்வதாக தொடர்ந்து தகவல் வெளிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்த சற்று நேரத்தில், ஓ.பன்னீர்செல்வமும் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது தனது இடத்தை உறுதிப்படுத்துவதற்குத் தானோ எனும் சந்தேகம் எழுகிறது.
இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் எடப்பாடி கலந்துகொள்ளாமல், ஓ.பி.எஸ் மட்டும் கலந்துகொண்டார். சமீபத்தில் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தின் கட்டுமானப் பணிகளை எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பார்வையிட்டனர். அப்போது ஓ.பி.எஸ் கலந்துகொள்ளவில்லை.
முன்பு எப்போதும் இணைந்தே இருக்கும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சமீபமாக இணைந்திருப்பதைத் தவிர்த்து வருகின்றனர். ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தருவதில் இருவருக்கும் மோதல் போக்கு நிலவிவந்தது அனைவரும் அறிந்ததே. இருவருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் புகைச்சலின் காரணமாகத்தான் சமீபத்தில் இரட்டைத் தலைமை குறித்த அ.தி.மு.க நிர்வாகிகளின் அதிருப்தி போக்கும் வெளிப்பட்டது.
தமிழக அரசியலில் ஓ.பி.எஸ் முக்கியத்துவத்தை இழக்கத் துவங்கியிருப்பதாக அ.தி.மு.க-வினரே ஒப்புக்கொள்கின்றனர். அதை உறுதிப்படுத்துவது போல, டெல்லிக்கும் சென்னைக்குமாக பயணத்தில் இருக்கிறார் ஓ.பி.எஸ். தனது மகனை எம்.பி-யாக்கி டெல்லிக்கு அனுப்பிய ஓ.பி.எஸ் தனது அதிகாரத்தை டெல்லியில் வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.
பிரதமர் மோடி ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவராக இருப்பதால் தமக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் எனும் முடிவிலும் அவர் இருப்பதாகத் தெரிகிறது. லோக்கல் எடப்பாடிக்கு, சென்ட்ரல் ஓ.பி.எஸ்ஸுக்கு என பார்டர் பிரித்துக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.