அரசியல்

" ஒரே நாடு - ஒரே தேர்தல் " என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் கலாச்சாரம் - கி.வீரமணி அறிக்கை !

'' ஒரே நாடு - ஒரே தேர்தல் " என்பது ஆர்.எஸ்.எஸின் ஒற்றைக் கலாச்சாரமே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

" ஒரே நாடு - ஒரே தேர்தல் " என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் கலாச்சாரம் - கி.வீரமணி அறிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையைக் கொண்டு வர மத்திய அரசு விரும்புகிறது. ''ஒரே நாடு, ஒரே தேர்தல்'' என்ற முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறை கூட்டாட்சி தத்துவத்திற்கு புறம்பானது ஆகும் என எதிர்கட்சிகள் இத்திட்டத்தை ஏற்க மறுத்து வருகின்றன.

இந்நிலையில்,ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று மத்திய பி.ஜே.பி. அரசு கூறுவது ஆர்.எஸ்.எஸின் ஒற்றைக் கலாச்சாரத்தைச் செயல்படுத்தும் யுக்தியே! மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்த முடிவை மாநிலக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து கருவிலேயே இந்த முயற்சியை அழிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில், " பதவியேற்று 20 நாள்களே ஆகியுள்ள காலகட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை அடுக்கடுக்காக நிறைவேற்றி மோடி அரசு - தனக்குள்ள பெரும்பான்மை என்ற மிருகப் பலத்தினை நம்பிக்கொண்டும், ஊடகங்கள் தங்கள் வயப்படுத்தப்பட்டுள்ளன என்ற ஒத்துழைப்பை நம்பியும், துணிந்து, புயல் காற்று வேகத்தில் செயலாற்றத் தொடங்கிவிட்டது!

பல ‘கண்ணிவெடிகள்’ தயார்!

ஜனநாயகம், சமதர்மம், மதச்சார்பின்மை, சமுகநீதி, கூட்டாட்சி தத்துவங்களுக்கு எதிரான பல ‘கண்ணிவெடிகள்’ தயாராகி பூமிக்கடியில் புதைக்கப்படுவது போன்ற, ஆபத்தானவை அணிவகுத்து நிற்கின்றன!

1. தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால், மாநிலங்களின் கல்வி உரிமை, பன் மதங்கள், பல கலாச்சாரங்கள், பன்மொழிகள் உள்ள பரந்த இந்தியாவினை ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் மட்டுமே ஆட்சி புரியும் என்பது போன்று, திணிக்கப்படுகிறது! 21, 22 ஆம் நூற்றாண்டுகளை நோக்கி, முன்னே செல்லவேண்டிய கல்வித் திட்டம் - புராதன கலாச்சாரம் என்ற பெயரில் வார்த்தை ஜாலங்களால் மூடப்பட்டுள்ள சர்க்கரை பூசிய விஷ உருண்டையேயாகும்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கைத் திட்டங்கள் ஒவ்வொன்றும் அவசர அவசரமாக செயல்பட வேகப்படுத்தப்படுகின்றன. இதே வரிசையில் அடுத்த பெரிய அறிவிப்பு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் ஒற்றைக் கலாச்சார - ஒற்றை அதிகாரத் தலைமைக்கு வழிவகுக்கப்படும் யோசனையே! ஒரே தேர்தல் - மாநிலங்களுக்கும், மத்திய ஆட்சிக்கும் என்று வழிவகை செய்யும் முறையில், அரசியல் அமைப்பின் அடிக்கட்டுமானத்தை உடைக்கும் ஆபத்தான போக்கு இது!

ஒரே நாடு - ஒரே தேர்தல்: இதன் பின்னணி என்ன?

இதன் ஒரே முக்கிய நோக்கம்:

1. மாநிலங்களையே - மாநில உரிமைகளையே பறித்தல் - கூட்டாட்சியை மாற்றி (Federal Set up) ஒற்றை ஆட்சி (Unitary System) யாக மாற்றுவதுதான்.

2. மாநிலக் கட்சிகள் செல்வாக்கு பெரும் தற்போதுள்ள நிலையை முற்றாக அழிக்கும் இந்த ஆபத்தான யோசனை நடைமுறைக்கு ஒவ்வாத திட்டமாகும்.

3. தேசிய கட்சிகள் எனப்படுபவைகளில் இன்று பா.ஜ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எல்லாவற்றையும் ஒப்பிட்டால், பா.ஜ.க. தவிர மற்ற பெயரில் உள்ள தேசிய கட்சிகள், நடைமுறையில் சுருங்கிவிட்டன!

4. இது மறைமுகமாக அதிபர் ஆட்சி முறையை ஏற்படுத்தும் முன்னோட்டம் ஆகும்!

நமது அரசியல் சட்ட கர்த்தாக்கள் பின்பற்றிய முறை பிரிட்டிஷ் கேபினட் முறை (Cabinet System)யேயாகும்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முறை நம்முடைய அரசியல் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று!

அதிபர் ஆட்சி முறை பிரகடனப்படுத்தப்பட்டால் மாநிலக் கட்சிகள் தங்கள் முடிவைத் தேடிக் கொண்டதாக ஆகும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செல்வாக்கு - வாக்கு வங்கி உடைய கட்சிகள்தான் வேட்பாளர்களை அப்போது தேர்தலில் நிறுத்த முடியும். இது மாநிலக் கட்சிகளுக்கு எப்படி முடியும்? அனைத்திந்திய அண்ணா தி.மு.க. என்று பெயரில் உள்ள கட்சிகூட தனது வேட்பாளரை நிறுத்த முடியாதே!

இந்திய அரசியல் சட்டத்தின் முதல் பிரிவே இந்தியா மாநிலங்களின் கூட்டாட்சி என்பதுதான். அப்படி இருக்கையில், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது, ஆட்சி நிலையாக அமையாவிட்டாலோ, 356, 365 விதிகள்படி நடவடிக்கைகள் வந்தாலோ என்ன நிலை ஏற்படும்? அங்கு அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை அம்மாநிலம் ஜனநாயக ஆட்சியின்றியே இருக்குமா?

செலவு சிக்கனம் என்பதுகூட ஏமாற்றும் வாதம்; நிதி ஆயோக் என்ற அமைப்பு இதுபற்றி மழுப்பிதான் உள்ளது!

ஒருபுறம் அரசுக்கு முன்பு ஏராளம் வருவாய் வந்த துறைகளையெல்லாம் ரயில்வே உள்பட, தனியார் முதலாளிகள் - கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு வசதியாக அவர்களிடம் தாரை வார்ப்பது அல்லது விற்று விடுவது என்ற திட்டங்களை அமல்படுத்திட, வேகமாக முயலுகிறது மத்திய பி.ஜே.பி. அரசு. தங்க முட்டையிடும் நவரத்ன தொழில் கூடங்களைக் கூட தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டே, இப்படி பேசுவது மத்திய அரசின் இரட்டை வேடம், இரட்டை நிலைப்பாடு அல்லவா!

அ.தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகள் இத்திட்டத்தை வரவேற்பது - கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொரிந்துகொள்வது போன்ற கேலிக் கூத்தேயாகும். ஜனநாயக மாநில உரிமைகள், மாநிலக் கட்சிகள் இதனைக் கடுமையாக எதிர்த்து கருவிலேயே அழிக்கவேண்டும். இது அரசியல் சட்ட விரோதமும்கூட " இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories