என்செபாலிடிஸ் நோயானது மூளையின் செயல்பாட்டைத் தாக்கி குழப்பம், கோமா, வலிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும் ஒருவித காய்ச்சல். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் தொடர் உயிரிழப்பால் பீகார் மாநில மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதுவரையிலும் முசாபர்பூர் மாவட்டத்தில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 107-ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஹீட்ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைநகர் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் 115 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, “இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டு ஹர்ஷ்வர்தன் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோதும் இதே முசாபர்பூர் நகரில் மர்ம காய்ச்சலுக்கு 139 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
அதே போன்ற சம்பவம்தான் தற்போது நிகழ்ந்துள்ளது. நோயை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளவேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வாய்ச்சொல் வீரராக இருக்கிறார், நோயை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.