மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க கூட்டணியின் மகத்தான வெற்றி குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. அந்தக் கடிதத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை வெகுவாகப் பாராட்டியுள்ளார் வைகோ. அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ்நாடு தனித்துவமான திராவிட பூமி என்பதை, நாடாளுமன்றத் தேர்தல் இமயம் முதல் குமரி வரை, குஜராத் முதல் வடகிழக்கு எல்லை வரை, வடக்கிலும், தெற்கிலும், மேற்கிலும், வடகிழக்கிலும், உள்ள மாநிலங்கள் அறிந்து கொள்கின்ற வாய்ப்பை வழங்கி இருக்கின்றது.
நரேந்திர மோடி எனும் அரசியல் ஆழிப் பேரலை சுருட்டி விழுங்க முடியாத திராவிடக் கோட்டை தமிழ்நாடு என்பதை, நாடும் ஏடும் மீண்டும் ஒருமுறை உணர்ந்து இருக்கின்றன.
வடபுலத்து அரசியல் தலைவர்கள், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், ஆட்சிபீடத்தில் நீண்ட காலம் வீற்றிருந்து செல்வாக்குப் பெற்றவர்கள், அரசியல் ஆய்வாளர்கள் இப்படி ஒவ்வொருவரும் வியப்புக்குறி மேலிட, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைக் கண்டும், தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் பெற்றிருக்கும் வெற்றியை அறிந்தும் மூக்கின் மேல் விரல் வைக் கின்றார்கள்.
தமிழகத்தில் தங்கள் செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்று, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க அமைப்புகள் அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டன. ஆளும் அ.தி.மு.க. அரசின் அதிகார பலத்தைத் துணைக்கு வைத்துக்கொண்டும், ஊடகங்கள், ஏடுகள், சமூக வலை தளங்கள் இவை அனைத்திலும் மேலா திக்கம் செலுத்தியும், மிகப்பெரிய கூட்டணி என்ற பிம்பத்தைக் கட்டி எழுப்பியும், இவை அனைத்தையும் விட தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் இன்னொரு கிளை அலுவலகம் போலச் செயல்பட வைத்துக் கொண்டும் படுதோல்வியைச் சந்தித்து இருக்கின்றன.
காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்து வந்த சனாதன-மதவாத சக்தியைத் தமிழகத்திற்குள் ஊடுருவ முடியாமல் தடுத்து நிறுத்திய பெருமை, மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை ஏற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர், ஆருயிர்ச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும்.
ஆருயிர் அண்ணன், தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களது மறைவுக்குப் பின்னர், திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தன் தோள் மீது சுமந்தது மட்டும் அன்றி, தமிழ்நாட்டின் அரசியல் திசைவழியைத் தீர்மானிக்கும் வரலாற்றுக் கடமை யையும், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
இந்திய அரசியல் அரங்கில், பாரதிய ஜனதா கட்சி, மிகப்பெரிய அரசியல் சக்தியாக விஸ்வரூபம் எடுத்து நின்று தேர்தல் களத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க. அரசின் அதிகார பலத்தைச் சேர்த்துக்கொண்டு, இன்னும் சில கட்சிகளின் ஆதரவைத் தன் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்திக் கொண்டும், நாடாளுமன்றத் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொண்டது.
ஆனால், தி.மு.கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பொழுதிலேயே மதவாத சக்திகள் தமிழகத்தில் கால் ஊன்ற அனுமதிக்க மாட்டோம் என்று சண்டமாருதம் செய்து, கொள்கை அடிப்படையில் சனாதன சக்திகளை எதிர்க்கின்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, மிகத் துணிவாகக் களமாடினார் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.
மத்திய, மாநில அரசுகளை நடத்துகின்ற பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும், மலைபோலக் குவிக்கப்பட்டு இருந்த ஊழல் பணத்தைத் தமிழ்நாட்டின் வீதியெங்கும் வாரி இறைத்தனர். வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு, வீட்டுக்கு வீடு முறை வைத்துப் பணம் வழங்கு கின்ற வேலையை ஆளுங்கட்சி மேற் கொண்டது.
தமிழகத் தேர்தல் ஆணையம், கையில் லாத ஊமையன் போல் வேடிக்கை பார்த்தது. காவல்துறை ஆளும் கட்சி யினரின் அக்கிரமங்களைத் தடுக்க முனையாமல் துணை போனது. இவற்றை எல்லாம் புறந்தள்ளி, தனது தேர்தல் பரப்புரை வியூகத்தை வகுத்துக் கொண்டு, தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருந்தார் மு.க.ஸ்டாலின்.
தமிழக மக்கள் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொண்டு, புதிய வரலாறை எழுதத் தொடங்கி விட்டார்கள் என்பதைத்தான், தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றியைப் போல, பிற மாநிலங் களிலும், குறிப்பாக வட மாநிலங் களிலும் பா.ஜ.க.வை எதிர்த்துக் களம் கண்ட காங்கிரஸ் கட்சியும், பிற மாநிலக் கட்சிகளும் வெற்றி பெற முடியாதது ஏன் என்கின்ற கேள்வி, அரசியல் அரங்கை உலுக்குகின்றது.
ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், திருமதி சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், தொலைநோக்குப் பார்வை யுடன், காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களை பிரதமர் வேட்பாள ராக அறிவித்தார்.
மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு, இந்தியா முழுவதும் பா.ஜ.க. அலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட மாநிலக் கட்சிகளால் வழிமொழியப்பட்டு இருந்தால், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வேறு திசையில் பயணித்து இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார் வைகோ.