பிரதமர் மோடி இரண்டாம் முறையாக கடந்த 30ம் தேதி பதவியேற்றார். அவரோடு 57 புதிய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரங்களில் தான், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்பதால் தன் மீது பலரும் பொறாமை பிடித்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார் மோடி. ஆனால் அவரது அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட உயர் சாதியினரே அதிகம் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
மோடியின் அமைச்சரவையில் சமூக நீதி எப்படி இருக்கிறது என்று ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் நேற்று (மே 31) தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவலைப் பதிவிட்டுள்ளார். அதில் அமைச்சர்களின் சமுதாய ரீதியாக பட்டியலிட்டுள்ளார்.
அதன்படி பதவியேற்ற 58 அமைச்சர்களில்
உயர் சாதியினர் - 32
பிற்பட்ட வகுப்பினர் -13
பட்டியல் இனத்தவர் - 6
பழங்குடியினர் - 4
சீக்கியர் - 2
இஸ்லாமியர் - 1
“ஒருவருக்கு ஒரு வாக்கு என சம வாய்ப்பு பேசும் அரசியல் தளத்தில், மக்கள் தொகையில் சுமார் 50-60% உள்ள பிற்பட்ட வகுப்பினருக்கு 13 அமைச்சர்கள், சுமார் 10-15% உள்ள உயர் சாதியினருக்கு 32 அமைச்சர்கள், இட ஒதுக்கீடு இருப்பதால் எம்.பி.க்கள் ஆன தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 10 அமைச்சர்கள் (இட ஒதுக்கீடு இல்லை எனில்?), சுமார் 14% உள்ள இஸ்லாமியருக்கு 1 அமைச்சர் என்பதே நிதர்சன உண்மை. அனைவருக்கும் சம வாய்ப்பு எப்போது?” என்று கேள்வியை எழுப்பியிருக்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன்.
இது இன்றைய முரசொலி நாளிதழில் பிரசுரம் ஆகியுள்ளது. மோடி அமைச்சரவையில் சமூக நீதி என்பது குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்ட நிலையில், நாட்டு மக்களிடையேயும் இதே பாகுபாட்டை மோடி அரசு உயர்த்திப் பிடிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.