மக்களவைத் தேர்தலில் வென்ற பிறகு, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. இந்த அரசுக்கான பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் மற்றும் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு வெளிநாடு, அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், நாட்டிலேயே மிகப்பெரிய 3-வது கட்சி என்ற பெருமையை உடைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க அழைப்பு விடுக்கவில்லை. இது, எதிர்க்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தங்களால் ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியவில்லை என்ற நினைப்பாலும், காழ்ப்புணர்ச்சியாலும் துளியளவு கூட அரசியல் நாகரிகம் இல்லாமல் பா.ஜ.க நடந்துகொள்கிறது என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், திருச்சி நாடாளுமன்ற எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஆளும் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பிறகு 3வது தேசிய கட்சியாக உள்ளது தி.மு.க. அதன் தலைவரான மு.க.ஸ்டாலினை பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருக்க வேண்டும். அதனை பா.ஜ.க செய்ய தவறியதால் இதை அரசு சார்ந்த விழாவாகவே ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், மு.க.ஸ்டாலினை அழைக்காததது தவறு. கண்டனத்திற்குரியது” என்று பேசியுள்ளார் திருநாவுக்கரசர் எம்.பி.