மோடி தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த புதிய அமைச்சரவையில் தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சிகளுக்கு பா.ஜ.க தலா ஒரு இடம் வழங்கும் என்று கூறப்பட்டது. அதன் அடிப்படையில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி பெற ஓ.பி.எஸ் முயற்சி செய்தார்.
மறுபுறம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளரான வைத்தியலிங்கத்துக்கு அமைச்சர் பதவி கேட்டு பா.ஜ.க தலைமையிடம் பேச்சு வார்த்தையில் இருந்ததாக கூறப்பட்டது.
அ.தி.மு.க-வோடு போடப்பட்ட தேர்தல் ஒப்பந்தப்படி, பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை இடம் இருப்பதால், அதை வைத்து அன்புமணிக்கு அமைச்சர் பதவி கேட்க மருத்துவர் ராமதாஸ் முயற்சித்ததாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் இன்று பதவி ஏற்ற புதிய அமைச்சரவையில் அ.தி.மு.கவுக்கு அமைச்சர் இலாகா எதுவும் ஒதுக்கப்படவில்லை.
அமைச்சர் இலாக்கா ஒதுக்க பா.ஜ.க தயாராக இருந்த போதும் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடியும் வெவ்வேறு நபர்களுக்கு அமைச்சர் பதவி கேட்டதால் இருவரையும் தவிர்த்துவிட்டு அமைச்சரவையை உருவாக்கியுள்ளது பா.ஜ.க.
ஒரு புறம் தன் மகனுக்கு சீட் வாங்குவதில் ஓ.பி.எஸ் விடாப்பிடியாக இருக்க, மறுபுறம் கட்சி சீனியர் தனது ஆதரவாளர் என்ற அடிப்படையில் வைத்திலிங்கத்துக்காக எடப்பாடியும் முட்டு கொடுக்க, யாருக்கும் சீட் இல்லாமல் போனது தான் வேடிக்கை.
கேபினட்டில் மட்டுமல்லாது இணை அமைச்சர் பதவியும் அ.தி.மு.க-விற்கு ஒதுக்கப்படாததால் ஓ.பி.எஸ் அப்செட்டாகவும், இ.பி.எஸ் கடுப்பிலும் உள்ளனராம்.