மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான விழா இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்திய முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் BIMSTEC (வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு) அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களும் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அனைத்து மாநிலங்களின் முதல் அமைச்சர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். எனினும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபஷ் சிங் பகல், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர மாநில முதல்வராக இன்று பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாததாக தெரிவித்துள்ளனர். மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக கூறியுள்ளனர். இவர்களைத் தவிர்த்து மற்ற மாநில முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
முகேஷ் அம்பானி , ரத்தன் டாடா போன்ற தொழிலதிபர்களும் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுத்துறையை சேர்ந்த பி.சி. உஷா, கிரிக்கெட் வீரர்கள் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், பேட்மின்டன் பயிற்சியாளர் புலேலா கோபிசந்த் மற்றும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை டிபா கர்மாகர் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன், ஷாருக் கான், சஞ்சய் பன்சலி மற்றும் கரண் ஜோஹர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.