ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. அதில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லி பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, 30ஆம் தேதி நடைபெறும் தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர், சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக எனக்கு எதுவும் கிடையாது. எனது பணி மக்களுக்கு பாதுகாவலனாக இருப்பதே, இன்று உங்களுக்கு உறுதியளிக்க போகிறேன். எனது அரசு புரட்சி நிறைந்த அரசாக இருக்கும். இன்னும் 6 மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் நாட்டின் முன்மாதிரியாக இந்த அரசு இருக்கும் என்பதனை நான் உறுதி செய்வேன் என கூறினார்.
பிரதமருடன் இன்று எனது முதல் சந்திப்பு நடந்தது . இன்னும் 5 வருடங்களில் 30, 40, 50 முறையாவது அவரை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும்பொழுதும், ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு பிரிவு அந்தஸ்து வழங்குவது பற்றி நினைவூட்டி கொண்டே இருப்பேன். தொடர்ந்து நாம் நினைவுப்படுத்துவது மாற்றத்தினை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.