நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தமிழகத்தில் அந்தக் கட்சியால் ஒரு இடத்தைக் கூடப் பிடிக்க முடியவில்லை.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 39 மக்களவைத் தொகுதிகளில் 38 தொகுதிகளைக் கைப்பற்றியது தி.மு.க கூட்டணி. தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் ப.வேலுச்சாமி 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ம.க வேட்பாளரை வீழ்த்தினார். தமிழகத்தில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார் தி.மு.க வேட்பாளர் ப.வேலுச்சாமி.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவனின் வெற்றி உறுதிசெய்யப்பட்டும் அறிவிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு காலதாமதமாக அறிவிக்கப்பட்டது. சிதம்பரம் தொகுதியில் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் திருமாவளவன். இந்தத் தொகுதியில்தான் மிகக்குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பதிவாகியுள்ளது.
தி.மு.க கூட்டணியின் 35 வேட்பாளர்கள் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 14 வேட்பாளர்கள் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.