கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது . இந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மத்தியில் பா.ஜ.க 345 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கிற நிலை உருவாகியுள்ளது. பிரதமர் மோடி - பா.ஜ.க தலைவர் அமித் ஷா இருவருக்கும் பலர் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் பா.ஜ.க வெற்றிக் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்பிரமணியம் சுவாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மக்களவைத் தேர்தலில் இந்துத்துவாவும், ஊழல் எதிர்ப்பும் பிரச்சாரங்களும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகள் என்பது ஒரு காரணியாக இருக்காது என நான் முன்பு தெரிவித்தது சரியாக அமைந்திருக்கிறது. அதில் எனக்கு மகிழ்ச்சி. திறமையற்ற பொருளாதார நடவடிக்கைகளில் இருந்தும், இந்தத் தேர்தலில் நாம் தப்பித்துவிட்டோம். வரும்காலங்களில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் அது ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகும் ” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இந்தத் தேர்தலில் மக்கள் மதத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் என்பதே தெரிகிறது. இது மோடி அலை அல்ல; மாறாக இந்துத்துவா அலை“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.