நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது முடிந்துள்ளது. இந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மத்தியில் பா.ஜ.க 353 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கிற நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ் 91 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலைவிட இந்த முறை பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதே நேரம் தனது வி.ஐ.பி தொகுதியான உ.பி மாநிலத்தின் அமேதியில் தனது வெற்றிவாய்ப்பை பா.ஜ.க.,வின் ஸ்மிருதி இரானியிடம் தவறவிட்டுள்ளார்.
இந்நிலையில் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். மோடிக்கும், பா.ஜ.க கூட்டணிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள்தான் இங்கு எப்போதும் எஜமானர்கள், அவர்கள் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என நினைக்கிறார்கள், அதுதான் தற்பொழுது நடந்துள்ளது. மக்கள் அளித்த இந்த கருத்துக்கு எந்த காரணம் சொல்லியும் அதற்கு சாயம் பூச விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “அமேதியில் என்னை தோற்கடித்த ஸ்மிருதி இரானிக்கு எனது வாழ்த்துக்கள். அமேதி மீது அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள் என வலியுறுத்தினார். நாம் கடுமையாக போராடவேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தன்னை வயநாட்டில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.