மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முடிவுகள் முழுவதும் அறிவிக்கப்படாத நிலையில், பா.ஜ.க நாடு முழுவதும் பெரும்பான்மை பெற்றுள்ளது. அதேநேரம் தமிழகத்தில், தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக ஆதரவினை பெற்றுள்ளது.
கர்நாடாகாவில், பா.ஜ.க ஆட்சியின் மதவாத அரசியலை எதிர்த்து நடிகர் பிரகாஷ்ராஜ் தேர்தலில் களம் இறங்கினார். பெங்களூரு மத்திய தொகுதியில் ச்யேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். மதியம் 3 மணி நிலவரப்படி 26,180 வாக்குகள் மட்டுமே பெற்று 3வது இடத்திலுள்ளார். எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்காததால் அவர் மன வருத்தத்தில் உள்ளார்.
இந்நிலையில், அவர் தனது தோல்வி குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “என் கன்னத்தில் இரு அறை விழுந்துள்ளது. முன்பைவிட இன்னும் அதிகம் கிண்டல்கள், இன்னும் மோசமான வசை சொற்கள், அவமானங்கள் என என்வழியில் எனக்கு எதிராக வருகின்றது. மதச்சார்பற்ற இந்தியாவிற்கான எனது பாதை தொடரும். எனது நிலைப்பாடில் நான் உறுதியாக இருக்கிறேன். இனி தான் என் கடுமையான பயணம் தொடங்குகிறது. என்னுடைய இந்த பயணத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.