அரசியல்

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

மின்னணு வாக்கு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவற்றை மாற்றவோ முயலாத அளவுக்கு கண்காணிப்பு ஏற்பாடுகள் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் (19.05.2019) நிறைவடைந்தது. பதிவான வாக்குகள் அனைத்தும் வருகின்ற 23ம் தேதி எண்ணப்படுகிறது.

இதற்கான பணிகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க.,வினர் மாற்ற முயற்சிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் ஆதாரங்களோடு முன் வைத்து வருகின்றனர். பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தனியார் வாகனத்தில் எடுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி உள்ள தகவல்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. எந்த ஒரு தொகுதி வாக்குகளும் தில்லுமுல்லு செய்து மாற்றப்படவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் உரிய முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த எந்திரங்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.

நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களும், ஒப்புகை சீட்டு எந்திரங்களும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில்தான் சீல் வைத்து மூடப்பட்டன. அப்படி சீல் வைக்கப்பட்டது முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீல் வைக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படையினர் ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையம் முன்பும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இத்தகைய பலத்த பாதுகாப்பை மீறி யாரும் உள்ளே சென்று விட முடியாது. தேர்தல் ஆணையம் செய்துள்ள பாதுகாப்பை தவிர வேட்பாளர்களும் தங்களது முகவர்கள் மூலம் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு பாதுகாப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் 24 மணி நேரமும் அங்குதான் இருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் மீறி எப்படி மின்னணு எந்திரங்களை கடத்தி சென்று விட முடியும். எனவே அடிப்படை ஆதாரமே இல்லாத இத்தகைய குற்றச்சாட்டுகளை யாரும் நம்ப வேண்டாம்.

உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் பயன்படுத்தாத அதாவது கையிருப்பு வைக்கப்பட்டு இருந்த மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றபோது தான் அதுபற்றி தெரியாமல் வதந்தியை பரப்பி விட்டனர். அத்தகைய இடங்களில் மின்னணு எந்திரம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதை அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் பிரச்சனை தீர்ந்துள்ளது. பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு செல்வது தொடர்பாக இப்போது நாங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம்.

ஜான்சி தொகுதியிலும் பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றதால்தான் கட்சி தொண்டர்கள் சந்தேகத்தில் வதந்தியை பரப்பிவிட்டனர். தற்போது அங்கும் உரிய விளக்கம் அளித்த பிறகு பிரச்சினை தீர்ந்துள்ளது.

இவ்வாறு அந்த தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories