அரசியல்

எட்டு வழிச்சாலை அமைத்தால் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் - முத்தரசன்

எட்டுவழிச்சாலை கொண்டுவந்தால் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும். அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எட்டு வழிச்சாலை அமைத்தால் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் - முத்தரசன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் - சென்னை எட்டுவழிச்சாலையை அமைத்தே தீருவோம் என தெரிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் - திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் எட்டுவழிச்சாலை தேவை இல்லை என தொடர்ந்து போராடினார்கள். போராடிய விவசாயிகளை அரசு மிகக் கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்து, அவர்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக அரசு அபகரித்து கருங்கற்களை ஊன்றியது.

நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் விவசாயிகளின் நிலங்களை அரசு கையகப்படுத்தியது தவறானது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் முடியும் வரை மௌனம் காத்த முதலமைச்சர் தற்போது எட்டுவழிச்சாலை உறுதியாகப் போடப்படும் என அறிவித்திருப்பது, தேர்தல் முடிந்துவிட்டது இனி யார் தயவும் தனக்கு தேவை இல்லை என்ற அகங்காரத்தோடு இருப்பதை வெளிப்படுத்துகின்றது.

எட்டு வழிச்சாலை அமைத்தால் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் - முத்தரசன்

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அரசே, மக்களுக்கு எதிராக செயல்பட முனைந்திருப்பது பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை உணர வேண்டும். முதலமைச்சரின் அறிவிப்பு குறித்து, அ.தி.மு.கவின் தோழமை கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதனை வெளிப்படுத்திட வேண்டும்.

மீண்டும் சாலை அமைக்கும் முயற்சியை அரசு மேற்கொண்டால் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும். அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன், சேலம்- சென்னை எட்டுவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories