முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 27 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார்கள். தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருக்கும் அவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில், 7 பேர் விடுதலை சம்பந்தமாக கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுத்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் ஆங்கில நாளிதழுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேட்டியளித்தார். அப்போது அவரிடம் எழுவர் விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பிரியங்கா காந்தி கூறியதாவது:- "தனிப்பட்ட முறையில் எனக்கு வன்முறை மீது நம்பிக்கை கிடையாது. வன்முறைக்கு பதிலாக மேலும் வன்முறையை ஏவுவது சரியான பதிலாக இருக்க முடியாது. வன்முறைக்கு அகிம்சைதான் சரியான பதிலாக இருக்க முடியும்.
இந்த விவகாரத்தை பொறுத்தவரை இரண்டு விதமான விஷயங்கள் உள்ளன. ஒன்று எனது தனிப்பட்ட விஷயம் தொடர்பானது. கொல்லப்பட்டவர் எனது தந்தை அந்த வகையில் எனது கருத்துக்களை ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். இந்த கொலையில் தண்டனை பெற்றுள்ள நளினியையும் நான் சிறைக்குச் சென்று சந்தித்தேன். நளினியும் என் வேதனை தொடர்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.
அடுத்ததாக எனது தந்தையின் கொலை அரசியல் தொடர்பானது. அது, முழுமையாக வேறுபட்டது. அரசியல் ரீதியாக பார்க்கும் போது, அவர் ஒரு முன்னாள் பிரதமர். இது அரசியல் ரீதியாக நடத்தப்பட்ட கொலை. பயங்கரவாதத்தின் செயலால் இந்த கொலை நடந்தது. அதில் மேலும் பலர் கொல்லப்பட்டனர். எனவே, இந்த விஷயத்தில் மனிதாபிமான முறையில் மகளாகிய நான் எடுத்த முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது" என்றார்.