மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார்; இருக்கிறார்; அப்படியே தொடர்ந்து இருப்பார்” என்றார். பின்னர் இந்த கருத்து தொடர்பாக கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "கோட்சே காந்தியின் உடலைத்தான் சுட்டுக் கொன்றார். ஆனால், சாத்வி பிராக்யா சிங் தாக்குர் போன்றவர்கள் அகிம்சை, அமைதி, சகிப்புத்தன்மை உள்ளிட்ட இந்தியாவின் ஆன்மாவை கொல்கின்றனர். அனைத்து விதமான அதிகாரம் மற்றும் அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் காந்தி. குறுகிய கண்ணோட்டத்துடனான அரசியல் ஆதாயங்களுக்கு இடமளிக்காமல் கட்சியில் இருந்து நீக்க பாஜக தலைமை உடனடியாக தீர்மானிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.