டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டெரிக் ஓபரேன் பாஜக தாக்குதல் நடத்திய வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.
பின்னர் பேட்டியளித்த அவர், அமித்ஷாவுக்கு எதிராக ஜனநாயக முறையில் கருப்புக்கொடி காட்டிய அப்பாவி மாணவர்கள், பொது மக்கள் மீது அமித்ஷாவுடன் பேரணிக்கு வந்த பாஜாகவினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தார்.
மாணவர்கள் போராட்டம் நடத்திய வித்யாசாகர் ராய் கல்லூரிக்குள் புகுந்த பாஜாகவினர் அங்கிருந்த சமூக சீர்திருத்த வாதியும், எழுத்தாளருனான வித்யாசாகர் ராய் சிலையையும் அடித்து உடைத்துள்ளார்கள் என்றார். பாஜக நடத்திய தாக்குதல் தொடர்பாக தங்களிடம் 44 வீடியோக்கள் ஆதாரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அந்த ஆதாரங்களுடன் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய படையை பாஜகவினர் இயக்குவதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.