பிரதமர் மோடி கடந்த 11-ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருக்கும் பயங்கரவாதிகளை அழிப்பதற்காக, பாலகோட் தாக்குதல் நடத்திய போது, விமானப்படை வல்லுநர்கள் அந்த குறிப்பிட்ட நாளில் நடத்தவேண்டாம் என்று தான் சொன்னார்கள்;
ஆனாலும் அன்றைய தினம் மேகக் கூட்டங்கள் குவியலாக இருப்பதால் அது நமது விமானப் படை விமானங்கள் அவர்களது ரேடார்களில் சிக்காமல் சென்று தாக்குவதற்கு உதவும் என்று நான்தான் சொன்னேன்; அந்த அறிவுரைப்படியே தாக்குதல் நடந்தது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியிருக்கிறார்.
மோடியின் இந்த பேச்சை கிண்டல் செய்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, தனது ட்வீட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது; "கடந்த 70 ஆண்டுகளில் எந்தவொரு பிரதமரும் இதுபோன்ற ‘அபாரமான’ கருத்தை கூறியதில்லை. பிரதமர் மோடி, ராணுவத்தினரையே மிஞ்சி விட்டார். வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக, பாலகோட் தாக்குதல் பற்றி பெருமையுடன் கூறுவதாக எண்ணிக் கொண்டு நமது ராணுவத்தின் போர் உத்திகளை அவர் அவமதித்து விட்டார். இதன் மூலம் அவர் மன்னிக்க முடியாத குற்றம் இழைத்து விட்டார்” என பதிவிட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ``பாலகோட் தாக்குதல் குறித்த ரகசியங்கள் எதையும் பிரதமர் வெளியிடவில்லை’’ என தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா செய்தியாளர்களை சந்தித்தார்; அப்போது அவர் கூறியதாவது; "ராணுவ அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்தள்ளிவிட்டு என் அறிவுரையின் படி தாக்குதலுக்கு அனுமதி அளித்ததாக பிரதமர் மோடி பெருமையாக சொல்லிக் கொள்கிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நீங்கள் புத்திசாலி என்பதை நிரூபிக்கவேண்டும் என்பதற்காக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களை அம்பலப்படுத்த கூடாது. தட்பவெப்பநிலை குறித்த வானிலை ரேடாருக்கும், விமான பயண ரேடாருக்கும் வித்தியாசம் தெரியாத ஒருவரை நம்பி நாடு ஒப்படைக்கப்பட்டுள்ளது’’ என்று அவர் தெரிவித்துள்ளார் .