தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க-வுடன் பேசியதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்த அபாண்ட கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார். கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
“பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கடந்த இரண்டு தினங்களாக மிகவும் மனச் சோர்வுடன் காணப்படுகிறார். தமிழகத்தில் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு முழுமையாக அவர்களுக்கு இல்லை என்பது தெரிந்தவுடன் எங்களை மிகவும் கடுமையாக சாடுகிறார். இருந்தாலும் ஒரு சகோதரியின் விமர்சனமாகவே நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடியிடம், கூட்டணி பற்றி பேசியதாக கூறியிருக்கிறார். அரண்டவன் கண்ணிற்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல, சகோதரி தமிழிசை அவர்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகிறார். மம்தா பானர்ஜியிடம் இரண்டு முறை பேசுவதற்காக மோடி முயற்சி செய்தார். ஆனால், இரண்டு முறையுமே மம்தா பானர்ஜி மோடியிடம் பேச விரும்பவில்லை.
அதற்கு அவர் சொன்ன விளக்கம் 23 ஆம் தேதிக்கு பிறகு புதிய பிரதமர் வருகிறார், அவருடன் பேசிக் கொள்கிறேன் என்று மம்தா கூறிவிட்டார். எனவே, மம்தா பானர்ஜியே மோடியிடம் பேச விரும்பாத போது, திராவிட முன்னேற்றக் கழக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் மோடியிடம் என்ன பேசப் போகிறார். இப்படியெல்லாம் மோடிக்கு ஒரு பெருமையை சேர்க்க தமிழிசை முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.