பாலகோட் தாக்குதல் குறித்து மோடி சமிபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் சர்ச்சைக்க்குறிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் மோடியின் இந்த பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல் ஆணையம் மோடியின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது; “பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருக்கும் பயங்கரவாதிகளை அழிப்பதற்காக, பாலகோட் தாக்குதல் நடத்திய போது, விமானப்படை வல்லுநர்கள் அந்த குறிப்பிட்ட நாளில் நடத்த வேண்டாம் என்று தான் சொன்னார்கள்; ஆனாலும் அன்றைய தினம் மேகக் கூட்டங்கள் குவியலாக இருப்பதால் அது நமது விமானப் படை விமானங்கள் அவர்களது ரேடார்களில் சிக்காமல் சென்று தாக்குவதற்கு உதவும் என்று நான்தான் சொன்னேன்; அந்த அறிவுரைப்படியே தாக்குதல் நடந்தது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியிருக்கிறார்.
இதன் மூலம் இந்திய விமானப் படையையே அவர் இழிவுபடுத்தியிருக்கிறார். 6 வது கட்ட வாக்குப் பதிவு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நாட்டின் பிரதமர் இப்படியெல்லாம் பேசுவது தேர்தல் ஆணையத்தின் விதிகளையெல்லாம் கேலிக்கூத்தாக்குவது இல்லையா? தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான முறையில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
தேசிய பாதுகாப்பு என்பது மோடிக்கு ஒரு சாதாரண பிரச்சனையாக போய்விட்டது. விமானப் படையின் செயல்பாட்டை நான் தான் தீர்மானித்தேன் என்று ஒரு பிரதமர் சொல்வது எத்தகைய பொறுப்பற்ற பேச்சு. நமது விமானப்படை விபரம் தெரியாதது என்றும், மேகக் கூட்டங்களைப் பற்றியோ, எதிரி நாட்டு ரேடாரில் சிக்காமல் தப்பிப்பது பற்றியோ எதுவும் தெரியாத படை என்றும் இழிவுபடுத்துவது போல இருக்கிறது மோடியின் பேச்சு”. என குற்றசாட்டியுள்ளார்.