உத்தர பிரதேசத்தில் கடந்த வாரம் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அந்த தேர்தல் பிரசாரத்தின் போது மாயாவதி அல்வர் வழக்கில் முதலைக்கண்ணீர் வடிக்கிறார் என்று விமர்சனம் செய்தார். மாயாவதிக்கு உண்மையில் இவ்விவகாரத்தில் அக்கறை இருந்தால், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்ள தைரியம் உள்ளதா என்று கேள்வியெழுப்பினார்.
மோடியின் இந்த கருத்துக்கு தற்போது பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பதிலளித்துள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர், “அரசியல் காரணங்களுக்காக தன் மனைவியை விட்டு வந்த மோடி, எப்படி மற்றவர்களின் சகோதரிகளையும், மனைவிகளையும் மதிப்பார்.
அல்வர் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மோடி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கிறார். இந்த விவகாரத்தில் மோடி அருவருக்கத்தக்க அரசியல் செய்கிறார். இதுவெட்கப்பட்ட வேண்டிய விஷயம். எனவே இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வின் உண்மையான அடையாளம் தெரியவரும்.
மேலும் ஷாப்பீர்பூர் மற்றும் சஹாரன்பூர் ஆகிய சம்பவங்களை தலித் மக்கள் மன்னிக்க மாட்டார்கள், அதேபோல மாணவன் ரோஹித் வெமுலா மரணம், உனா வன்கொடுமை என மக்கள் எதையும் மறந்திருக்க மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்தார்.