ஈஸ்வர ரெட்டி என்பவரை ஒரு பெண்ணும் அவரின் கணவரும் பார்மா எக்சில் அமைப்பின் தலைவர் பதவியை பெறுவதற்காக அணுகியுள்ளனர். ஈஸ்வர ரெட்டி பாஜகவில் பல்வேறு முக்கிய நிர்வாகிகளுக்கு நெருக்கமாக இருந்துள்ளார்.அப்போது அந்த பெண்ணிடமும், ஆணிடமும், கிருஷ்ணா கிஷோர் என்பவரைத் தெரியும், அவர் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறி அவரிடம் அழைத்துச் சென்றார். இந்த பதவிக்காக ரூ.2.17 கோடியை அந்த பெண்ணும் அவரின் கணவரும் வழங்கியுள்ளார்கள்
அவர்களிடம் நிர்மலா சீதாராமன் கையொப்பமிடப்பட்ட பார்மா எக்சில் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டதாக போலியான கடிதத்தையும் காட்டினார். அப்போது நிர்மலா சீதாராமன் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தார்.ஆனால் மஹிபால் ரெட்டிக்கு எந்த விதமான வேலையும் கடைசி வரை வாங்கி தரப்படவில்லை.
இதையடுத்து தற்போது மஹிபால் மற்றும் அவரது மனைவி ப்ரவர்ணா இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீஸார் பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட 8 பேர் மீது மோசடி, கிரிமினல் நோக்கத்துடன் செயல்படுதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.இதில் முரளிதர ராவ் நேரடியாக ஈடுப்பட்டு இருப்பதால் அவரும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முரளிதர் ராவ் மறுத்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், " தற்போதுள்ள பிரச்சினைக்கும், எப்ஐஆர்க்கும் எனக்கும் தொடர்பில்லை. நீதிமன்றத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள். நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளை என்னுடைய வழக்கறிஞர்கள் நிறுத்த உதவி செய்வார்கள்" எனத் தெரிவித்தார்.