சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்தத் தலைவா் சுப்பிரமணியன் சுவாமி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.அப்போது அவா் கூறுகையில், “தமிழகத்தில் பாஜக 5 தொகுதிகளில் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதன் வெற்றி, தோல்வி குறித்து எனக்குத் தொியாது. பாஜக தனித்து போட்டியிட்டிருந்தால் நான் பிரசாரம் செய்திருப்பேன் என்று தொிவித்தாா்.
மேலும் அவா் பேசுகையில், கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் ஒன்றும் செய்யமுடியாது.தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அறிக்கையை குப்பைத் தொட்டியில் போடுங்கள்.மேலும், பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், அதனால் தோற்றாலும் பரவாயில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஏழு பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை எனத் தெரிவித்தார். கூட்டணியின் தேர்தல் அறிக்கையை குப்பையில் தான் போட வேண்டும் என்றும், ஒருபோதும் 7 பேரை விடுவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், பாஜக தமிழக தலைவர் தமிழிசை மாநில அந்தஸ்தில் உள்ளவர் என்றும், அவருக்கு டெல்லியின் கொள்கை தெரியாது என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வலியுறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.